தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் டாஸ்மாக் கடை எண்: 10138இல் விற்பனையாளராக நாகராஜன் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த வருடம் 5/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் வேலையில் சேர்ந்த நாள் முதல் “நீ உடல் ஊனமுற்றவன், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என இழிவாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்திருக்கின்றனர். மேலும், மேலதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார் மாற்றுத்திறனாளியான டாஸ்மாக் ஊழியர்.
இதனால் திங்கட்கிழமையன்று, (26.07.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விற்பனையாளர் நாகராஜன், “கடந்த வருடம் 05/10/2020 அன்று மேற்கண்ட கடைக்கு விற்பனையாளராக மாற்றம் செய்யப்பட்ட நாள் முதல், ‘நீ உடல் ஊனமுற்றவன். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.’ என தினசரி என்னைக் கேலி பேசியுள்ளார் கடையின் சூப்பர்வைசரான சரவணன். இதுகுறித்து மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோரிடம் தபாலிலும் தொலைபேசியிலும் புகாரளித்தேன்.
இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பணியும் செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான், இம்முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்த காவல்துறையினரால் அவரது தீக்குளிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு, தொடர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
படம்: விவேக்