கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் தனது மகன் மற்றும் உறவினர் ஒருவருடன் வந்த ஸ்ரீமதியின் தாய் தமிழக டிஜிபியிடம் புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''சிபிசிஐடி போலீசார் எங்கள் சொந்தக்காரர்களை மிரட்டி இதை தற்கொலை என்று சொல்லு என்பதுபோன்று மிரட்டி விசாரணை செய்கிறார்கள். சம்மன் கொடுக்காமல் விசாரணைக்கு கூப்பிடுறாங்க. நாங்கள் ஏதாவது சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்கு சாதகமான பதில்களை தான் சொல்கிறார்கள். சம்மனே கொடுக்காமல் எங்கள் சொந்தக்காரர்களிடம் இருந்து போனை பறித்துக் கொண்டு செல்கிறார்கள். இதுபோன்ற நிறைய வேலைகள் செய்கிறார்கள். பள்ளி நிர்வாகத்திற்கு சார்பாகவும், தற்கொலை என்ற முடிவிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு சிபிசிஐடி விசாரணையில் முழு நம்பிக்கை இல்லை. எனக்கு ஒரு நல்ல புலனாய்வு விசாரணை வேண்டும் என தமிழக டிஜிபியிடம் கேட்டேன். முதலில் அவரை பார்த்து “ஐயா நான் என்ன பாவம் பண்ணேன். எதற்காக எனக்கு நீதி மறுக்கப்படுது” அப்படின்னு கேட்டேன். “அது என்னவோ எனக்கு தெரியலையே” அப்படின்னு சொன்னாரு. அந்த பள்ளிக்கும் எங்களுக்கும் முன் பகை பின் பகை கிடையாது. பள்ளி வளாகத்தில் எனது குழந்தை இறந்துள்ளாள். அது கொலையா? தற்கொலையா? அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கக் கூடிய இடத்தில் இருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். ஏன் எங்களுக்கு பதில் சொல்லாமல் இவ்வளவு நாட்கள் இழுத்தடிக்கிறார்கள். எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். என் புள்ளையையும் கொன்னுட்டு எங்களையும் நாயா பேயா ஏன் அலைய வைக்கிறார்கள். என் பிள்ளைக்கான நீதி கிடைக்கும் வரை நான் ஓயவே மாட்டேன் என்று சொன்னேன். அவர் அதற்கு சரிம்மா என்று சொன்னதோடு சரி'' என்றார்.