பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன்பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ‘வணக்கம் சென்னை’ எனக் கூறி பிரதமர் மோடி பேசுகையில், “திறமை, வணிகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையமாக சென்னை திகழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போதும் உற்சாகம் அடைகிறேன். நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம் எனப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். உலகளவில் பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியாவை உருவாக்க உறுதிப்பாடு எடுத்துள்ளேன்
சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை.
கல்பாக்கத்தில் தொடங்கப்பட்ட ஈனுலையை பார்த்து வியப்படைந்தேன். கல்பாக்கம் ஈனுலை திட்டம் மூலம் எரிசக்தி துறையில் 2வது வளர்ந்த நாடாக இந்தியா மாறும். ஒரு கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் இலவசமாக கிடைக்கும். உபரி மின்சாரத்தை அரசே கொள்முதல் செய்யும். சூரிய ஒளி மின்சக்தி திட்டம் மூலம் இந்தியா எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடையும். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் குடும்பத்திற்கு முன்னுரிமை தருகின்றன. மோடிக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்திய நாட்டு மக்களை மனதில் வைத்து அரசியல் செய்கிறேன். இந்த நாடு தான் எனது குடும்பம். நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். நாட்டில் இருக்கும் ஏழைகளே எனது சொந்தங்கள். தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக நான் சொல்கிறேன் ” எனப் பேசினார்.