
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தொடக்க நிலையிலேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியதற்கான முக்கிய காரணங்கள்
1. இந்த வழக்கின் விசாரணை தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் குற்றவாளிகளின் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
2. முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி கோவிந்தராஜுக்கும் காவல்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரிய வருகிறது.
3. கள்ளச்சாராய வழக்கு அதிக அளவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர் குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு அறிக்கையே கூறுகிறது.
4. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் வயிற்றுப்போக்கு காரணமாக மரணம் என பேட்டி அளிக்கிறார். மறுபுறம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அரசு இடைநீக்கம் செய்கிறது.
5. இடைநீக்கம் செய்யப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளாமல் இடை நீக்கத்தை காரணம் இல்லாமல் அரசு ரத்து செய்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை.
6. எத்தனை பேர் மரணம் என்பதை கூட அரசால் தெளிவாக கூற முடியவில்லை. ஓர் ஆவணத்தில் 67 பேர் என்றும் மற்றொரு ஆவணத்தில் 68 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து தொடர் குற்றங்களை தடுக்க தவறியதாக காவல்துறை மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர்களே விசாரணை செய்ய அனுமதிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.