கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் அண்ணன் வழி பேத்தியான டாக்டர் டயானாஜிப் கடந்த வாரம் லண்டனிலிருந்து கொச்சி வந்தவர் அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களான மருந்துகளையும், மருத்துவ உதவிகளையும் செய்துவிட்டு தேனிக்கு விசிட் அடித்தார் டயானாஜிப்.
அதன்பின் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்திலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினாலும் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால் கட்டப்பனையுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஒப்படைத்தார். அதன்பின் தேனி வந்த டயானாஜிப் என்.ஆர்.டி. மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை தொடக்கி வைத்து அங்கு வந்த கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அதைத் தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை பார்க்க சென்றார். ஆனால் கலெக்டர் இல்லாததால் மாவட்ட சூப்பிரண்டான பாஸ்கரனை சந்தித்தார்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டாக்டர் டயானாஜிப்... கேரளா மாநிலத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். அவர்கள் வெள்ளத் துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். கேரளாவுக்கு இப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அனுப்பிய நிவாரணம் என்பது ஒரு துளி அளவு தான். உலகத்திலேயே முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமான அணை. இந்த அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு பலமாகத்தான் எனது தாத்தா பென்னிகுக் இந்த அணையை கட்டியிருக்கிறார். இந்த அணை விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மாநில மக்களின் நலனின் கருத்தில் கொண்டு நீர் மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும்.
அந்த அளவுக்கு அணை பலமாக உள்ளது என எனது தாத்தா தனது ஆவண புத்தகத்திலேயே எழுதி வைத்திருக்கிறார். அந்த ஆவண புத்தகத்தையும் கலெக்டர், எஸ்.பி.யிடம் காட்டத்தான் வந்தேன். அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை நிறுத்தி 152 அடி வரை தேக்க இரு மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதுதான் எனது வேண்டுகோளாக கேட்கிறேன். அணையை கட்டிய வரலாறு குறித்த புத்தகத்தில் அணை பலமாக இருக்கிறது என்று தெளிவாகவே எனது தாத்தா குறிப்பிட்டுள்ளார். எனது கேரளா மக்கள் இதில் அச்சப்பட தேவையில்லை. இரு மாநில மக்களிடையே நட்புறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கூறினார். அதன்பின் மும்பை வழியாக லண்டன் சென்றார் பென்னிகுக் பேத்தி டயானாஜிப்.