பள்ளிக்கல்வித்துறை சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 11ஆம் வகுப்பு படிக்கும் 68 மாணவர்கள் வெளிநாட்டில் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைத் துபாயில் நடைபெறும் துபாய் ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்துச் சென்றார்.
இதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளி மாணவர்களை எப்படி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறோமோ அதேபோல் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருவது எங்கள் தலையாயக் கடமை. இந்த நான்கு நாட்களும் அவர்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும் நான்தான் இருக்கப் போகின்றேன். அந்த வகையில் நல்ல அனுபவம் வாய்ந்த சுற்றுலாவாக இது இருக்கும்” எனக் கூறினார்.
துபாய் சென்ற பின் மாணவர்களைத் துபாய் இந்தியத் தூதரகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தங்களை அறிமுகம் செய்து கொண்ட மாணவர்கள் விமான பயணத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.