தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமாலா. இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒன்றாக செல்லும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் சொத்து பிரச்சனைகளிலும் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் என கணவன் மனைவி சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இருந்தபோதிலும் இத்தகைய சண்டைகள் குடும்பத்தில் நிம்மதியைக் கொடுக்காததால், கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் மணிமாலா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.
இதற்கிடையில், இந்த விவாகரத்து வழக்கில் மணிமாலா தனது கணவர் ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு போடிநாயக்கனூர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஜீவனாம்சம் வழக்கு தொடர்பாக கடந்த 13 ஆம் தேதி பகல் 1 மணியளவில், மணிமாலா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதன்பிறகு, நீதிமன்றத்தில் தனது வேலைகளை முடித்துக்கொண்டு போடி பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டவேரா கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
இதையடுத்து, மணிமாலாவுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அந்த கார் திடீரென அதிக வேகத்துடன் வந்து மணிமாலாவை பயங்கரமாக மோதியுள்ளது. இதில், காரின் சக்கரத்தில் சிக்கிய மணிமாலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒருகணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த காரை ஓட்டி வந்த பாண்டிதுரை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மணிமாலாவை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதே சமயம், கார் ஓட்டுநர் பாண்டிதுரையிடம் மேற்கொண்ட விசாரணையில், மணிமாலாவின் கணவர் ரமேஷ் தான் கார் ஏற்றிக் கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போடி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார், ரமேஷ் மற்றும் கார் ஓட்டுநர் பாண்டிதுரை ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த கணவரின் செயல் தேனி சுற்று வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.