
சேலத்தில், தன்னைக் கேட்காமல் மனைவி கூந்தலின் நீளத்தைக் குறைத்து வெட்டிக்கொண்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில், கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் கிச்சிப்பாளையம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ராஜா (33). வெள்ளிப்பட்டறை கூலித்தொழிலாளி. முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
இதையடுத்து அவர், அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழும் வாணி (31) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்தார்.
தற்போது கரோனா ஊரடங்கால் ராஜா வேலையில்லாமல் வீட்டில் முடங்கி இருந்தார். மேலும், கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து வாணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். அவருடைய நடத்தையிலும் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், வாணி அருகில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று தனது கூந்தலின் நீளத்தைக் குறைத்து ஸ்டைலாக வெட்டிக்கொண்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்த ராஜா, “ஏன் என்னிடம் சொல்லாமல் தலைமுடியின் நீளத்தைக் குறைத்தாய்?” என்று கேட்டு தகராறு செய்தார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு வாணி நேற்று முன்தினம் (ஜூன் 24) அருகில் உள்ள தங்கை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மனைவி தன்னை மதிக்காமல் வீட்டைவிட்டுச் சென்றதால் விரக்தியுடைந்த ராஜா, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.