தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சேதுக்கு வாய்தான் பகுதியைச் சேர்ந்தவர் அங்குசாமி. 78 வயதான இவர் கோயில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி பொன் மாடத்தி. இருவருக்கும் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரிலேயே வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் விவசாயம் செய்துவந்த அங்குசாமி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாடத்தி கடந்த சில மாதங்களாகப் படுத்த படுக்கையாக வீட்டில் இருந்தார். அங்குசாமி ஒரு மகன் வீட்டிலும், பொன் மாடத்தி அதே பகுதியில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். தனது மனைவி உடல்நலம் குறித்துக் கேட்டறிந்த அங்குசாமி, "என்னோட மனைவி பொன் மாடத்தி என்னைக்கு சாகுறாளோ அதே நாள்ல நானும் செத்துப்போய்விடுவேன்" என தனது மகன்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்த சூழலில், பொன் மாடத்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் கடந்த 3ஆம் தேதியன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பொன் மாடத்தியின் உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறினர். அதே நேரம், இந்த தகவலை அவரது கணவர் அங்குசாமியிடம் தெரிவிக்காமல் குடும்பத்தினர் வைத்திருந்தனர். இதனிடையே, அடுத்த நாள் மாலை பொன் மடத்தியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் உறவினர்கள் சேர்ந்து பொன் மாடத்தி இறந்த தகவலை அங்குசாமியுடன் கூற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
அதற்கேற்ப இறுதிச் சடங்கிற்காக அங்குசாமியை பொன்மாடத்தி உடலை வைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, தனது மனைவியின் உடலைப் பார்த்து உடைந்துபோன அங்குசாமி யாரிடமும் பேசாமலே அமைதியாக இருந்துள்ளார். பொன்மாடத்தியை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அங்குசாமி கூறியுள்ளார். இதை கேட்டவுடன் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்.. அங்குசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ந்துபோன உறவினர்கள் பொன்மாடத்தி - அங்குசாமி உடலைகளை பார்த்து கண்கலங்கி நின்றனர். அதன்பிறகு, உயிரிழந்த தம்பதியின் உடல்களை ஊர்மக்கள் முன்னிலையில் அடக்கம் செய்தனர்.
மனைவியின் இறுதிச்சடங்கைப் பார்த்த அதே நாளில் கணவனும் உயிரிழந்த சம்பவம்.. அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.