சிவகாசி அருகே இன்னொருவர் மனைவியுடன் நள்ளிரவில் பழகியவர் அந்தப் பெண்ணின் கணவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கருப்பசாமி (வயது 26), எட்டக்காபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அதே பட்டாசு ஆலையில் வேலை பார்த்துவந்த சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிசெல்வத்தின் மனைவி கவிதா (வயது 23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நீண்ட காலமாகப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு பாண்டிசெல்வம் தன் மனைவியிடம் கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். கணவர் பாண்டிசெல்வம் காலையில்தான் வருவார் எனக் கருதிய கவிதா கருப்பசாமிக்கு போன் பண்ணி அழைத்துள்ளார். கருப்பசாமியும் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கவிதா வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென்று வீடு திரும்பிய பாண்டிசெல்வம், தன் மனைவியுடன் கருப்பசாமி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டிசெல்வம் கருப்பசாமியை கட்டையால் அடித்துப் படுகொலை செய்தார்.
பாண்டிசெல்வமும் கவிதாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டிசெல்வத்தைக் கைது செய்துள்ளனர்.