சேலம் அருகே, கிரைண்டர் குழவிக் கல்லை தலையில் போட்டு மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 68). தேநீர் போடுபவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 65). இவர்களுடைய மகன் நாகராஜ், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. அக். 7- ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த செல்வம், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து மனைவியின் தலை மீது போட்டுள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து செல்வம் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து மறுநாள் காலையில் தகவல் அறிந்த வீராணம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் சென்று பார்த்தனர். அங்கே ஜெயந்தி கொலையுண்டு கிடப்பது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர்.
காவல்துறையில் செல்வம் அளித்துள்ள வாக்குமூலம், "நான் அயோத்தியாபட்டணத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் வேலை செய்து வந்தேன். சம்பவத்தன்று நான் வேலைக்குச் செல்லாமல் திடீரென்று விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தேன். இதையறிந்த என் மனைவி திட்டினார். இதனால் எங்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினேன். அப்போதும் ஜெயந்தி என்னை, வேலைக்குச் செல்லும்படி திட்டினார். இதனால் மன உளைச்சல் அடைந்த நான், குழவிக் கல்லை தலையில் போட்டு அவரை கொன்று விட்டேன்." இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து, செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.