Skip to main content

என். சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

N. Sankarayya gets 'Thakaisal Tamilar' award!

 

தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என். சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழக முதலமைச்சர் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார். 

 

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. 

 

'தகைசால் தமிழர்' விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்