திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்டது பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி என்பவர் முதியோர் உதவித்தொகை பெற்று வாழ்ந்து வந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் கலெக்டர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம் என அலைந்தது. அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன்பின்னர் இதுப்பற்றிய விவரம் செய்தியாக வெளியாக, மூதாட்டிக்கு மீண்டும் முதியோர் உதவி தொகை வழங்க திருப்பத்தூர் தாசில்தார் அனந்த கிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். உண்மையில் அவர் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர் என்பது தெரிந்து தாசில்தார் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
செய்தித்தாள்களில், செய்தி சேனல்களில் செய்தி வந்தாலும், நாமயேன் பாதிக்கப்படும் பொதுமக்களை தேடி போகனும், வேணும்கிறவங்க நம்மளை தேடிவரட்டு என்கிற எண்ணத்திலேயே பெரும்பாலான அரசு அதிகாரிகள் இருக்க, செய்தியை அறிந்து விசாரணை செய்து நேரடியாக சென்று அரசின் உதவித்தொகை கிடைக்க செய்த அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது.