திருச்சி அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து விரட்டி சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது காவல் அதிகாரி ஒருவர் கொண்டுள்ள மிருகத்தன்மையின் மிக மோசமான உதாரணமாக இருக்கும் என்று கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமைச்செயலருக்கும், காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தவறிழைத்த காவல்அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம், காயமடைந்த உஷாவின் கணவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களையும் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.