தனி மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜார்கண்டில் ஆதார் அட்டை தகவல்கள் வெளிவந்ததாக செய்திகள் தெரிவித்தன. ஒரு தனி நபர் பற்றிய விவரங்கள் எல்லாம் வெளியானால் அந்த நபருக்கு அச்சுறுத்தலோ, ஆபத்தோ ஏற்பட வாய்ப்புள்ளது. இச்சூழலில் ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தனி மனித சுதந்திரம் என்பது அரசியலமைப்பு சட்டப்படி அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது. இதனை தமாகா வரவேற்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்பில் தனி மனித உரிமையின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.
எனவே உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பாக தற்போது அளித்திருக்கும் தீர்ப்பை மத்திய பாஜ அரசு கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மனிதரின் சுதந்திரமும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு தனி மனித விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய பாஜ அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.