கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள வெண்கரும்பூரை சேர்ந்தவர் ராஜசேகர்(35). இவர் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2019ல் தொழுதூர் அருகேயுள்ள கல்லூரிலுள்ள ஒரு கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்கள் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 01.06.2019 அன்று கல்குவாரியை சோதனையிட்டார்.
இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் இராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி ஆகியோர் நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜசேகரை மிரட்டியதோடு, லாரி ஏற்றிக் கொலை செய்யுமாறு கல்குவாரி பணியாளர்களிடம் கூறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இதை ஆதாரமாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையர் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
அவரது தீர்ப்பில், 'இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் காவலர் ராஜசேகருக்கு 4 வாரத்திற்குள் தமிழக அரசு 1 லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். அதை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஊதியத்தில் ரூபாய் 75 ஆயிரமும், கேட்டு தண்டபாணியின் ஊதியத்தில் ரூபாய் 25 ஆயிரமும் பிடித்தம் செய்து வழங்க வேண்டும்' என்று தீர்ப்பு கூறினார். புவனேஸ்வரி தற்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகவும், தண்டபாணி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திலும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.