Skip to main content

மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் தேர்வில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை: ஸ்டாலின்

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் தேர்வில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை: ஸ்டாலின்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் தேர்வில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, அதற்கான தேர்வுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கடிதத்ததில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமிப்பதற்காகப் பார்வையில் கண்ட தங்களது அவசரக் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

இந்த வாரியத்தின் உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு கொடுத்து உள்ளோரின் பெயர்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் முழு ‘பயோ டேட்டா’ விவரங்களும் தங்களின் கடிதத்தில் இணைக்கப்படவில்லை. உள்நோக்கத்தோடு, இரண்டு விடுமுறை தினங்கள் மட்டுமே, மிகக்குறுகிய காலஅவகாசம் கொடுத்து, இக்கூட்டத்திற்கான கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால், விருப்பமனு கொடுத்துள்ளோரில், மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றத் தேவைப்படும் தகுதியுள்ளவர் யார் என்பது பற்றி ஆக்கப்பூர்வமான கருத்தைத் தேர்வுக்குழு உறுப்பினரிடமிருந்து பெறுவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று நினைக்க இடமேதும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்வுக்குழுவில் தமிழகப் பேரவைத் தலைவரையும் உறுப்பினராக நியமித்திருப்பதன் அடிப்படை நோக்கமே மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தேர்வு வெளிப்படையாகவும், ஒளிவுமறைவின்றியும், நடு நிலைமையுடனும்  நடைபெற வேண்டும் என்ற உயரிய சிந்தனை அடிப்படையில்தான் என்பதை நான் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஆனால், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அவர்கள் நடுநிலைமை பிறழ்ந்து, சமீபகாலமாக முதலமைச்சருடன் கூட்டணி அமைத்து, கைகோர்த்துக் கொண்டு, சட்டநெறிமுறைகளுக்கு முரணாகச் செயல்படுவதாலும், சபாநாயகர் அவர்கள் இடம்பெறும் இதுபோன்ற அரசின் சார்பிலான தேர்வுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்றுக் கருத்துச் சொல்வது, தகுதி வாய்ந்த உறுப்பினர்களை மாநில மனித உரிமை ஆணையத்திற்கு தேர்வு செய்யும் நேர்மையான பணிக்கு எந்தவிதத்திலும் உதவாது என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, உரிய காலஅவகாசம் தராமல் அவசரகதியில் கூட்டப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்குழுக் கூட்டத்தில், பிரதான எதிர் கட்சி தலைவர் என்றமுறையில் உறுப்பினராக அக்குழுவில் இடம்பெற்றுள்ள நான் பங்கேற்க, எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்பதால், அதில் பங்கேற்க இயலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்