தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கறிஞரான ஹரிஹரன் தரப்பில் இருந்து கொலையாளிகளுக்கு பெரும் தொகை மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலர்கொடி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மனைவி என்று தெரியவந்துள்ளது. எதற்காக, யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.