Skip to main content

காதலர் தினம்: ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒரு கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

ரொ


உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணிசமான விவசாயிகள் ரோஜா மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.


ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. பசுமைக்குடிகள் அமைத்து ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது. 


தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன.


ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது. 


நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த பதினைந்து நாள்களுக்கு மேலாகவும் ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகளவில் ஓசூர் ரோஜாக்களுக்கு ஏற்றுமதி ஆணைகள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து ரோஜா மலர் விவசாயிகள் கூறுகையில், ''காதலர் தின விழாவையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.


உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்