புதுச்சேரி அடுத்த எல்லை பகுதியான காலாப்பட்டு பள்ளி தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ்(58). மரக்காணம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா. தமிழக பகுதியான செய்யாங்குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20ஆம் தேதி இவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனர். நகைகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரான்சிஸ், காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான கனகசெட்டிக்குளத்தில் காலாப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கூனிமேடுகுப்பத்தை சேர்ந்த சுமன்(27) என்பதும், பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் வீட்டில் நகைகளைத் திருடி இருப்பது தெரிய வந்தது. பின்பு அவன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.