கரூர் அடுத்த காந்தி கிராமம் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு கருணைத் தொகையுடன், ஒதுக்கீடு ஆணை மற்றும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வீடுகளுக்கு தமிழக அரசு சார்பில் 7.5 லட்சமும், பயனாளிகள் பங்கு தொகையாக 1 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் நிதி ரூபாய் 1.5 லட்சம் மட்டுமே ஆகும். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடைந்து இருந்த நிலையில், அவற்றை அகற்றிவிட்டு 150 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “குடிசை மாற்று வாரியம் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் லட்சக் கணக்கான வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளன. சென்னையில் கூவம் மற்றும் பக்கிங்ஹோம் கால்வாய் ஆகிய இடங்களில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நிதி ஆண்டில் 1200 கோடியும், நடப்பு நிதியாண்டில் 1200 என 2400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 15,000 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.