ஓசூர் அருகே, மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியைக் கொன்று சடலத்தைப் புதைத்த வாலிபர்களைக் காவல்துறை பிடித்து விசாரித்துவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35), ரவுடி. இவர் மீது ஓசூர் காவல் நிலையம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, எப்பகோடி ஆகிய காவல் நிலையங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு, மஞ்சுநாத் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து காவல்துறையினர் சுறுசுறுப்படைந்தனர். ஓசூர் டிஎஸ்பி (பொறுப்பு) சங்கர் உள்ளிட்ட காவல்துறையினர், மஞ்சுநாத் மாயமான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகிய இருவரும்தான் கடைசியாக மஞ்சுநாத்திடம் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் அவர்களைப் பிடித்துவந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இவர்களிடம் மஞ்சுநாத் அடிக்கடி மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த இருவரும் மஞ்சுநாத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் போட்ட திட்டத்தின்படியே, கடந்த 7 நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு மஞ்சுநாத்தை சந்தீப்பின் வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். அவர்களின் நோக்கம் புரியாமல் அங்கே சென்ற மஞ்சுநாத்தை அவர்கள், கண்களில் மிளகாய்ப்பொடி தூவி நிலைகுலைய வைத்துள்ளனர். பின்னர் கட்டை, இரும்பு உருளையால் சரமாரியாக தாக்கிக் கொன்றுள்ளனர்.
சந்தேகம் வராமல் இருக்க, சடலத்தை உளிவீரனப்பள்ளி அருகே ஏரிப் பகுதியில் புதைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல ஊருக்குள் சுற்றிவந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர், வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 1) சடலத்தைத் தோண்டி எடுத்தனர். அங்கேயே உடற்கூராய்வும் செய்யப்பட்டது.
பிடிபட்ட சேத்தன், சந்தீப் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? உண்மையில் மாமூல் கேட்ட தகராறில்தான் கொலை நடந்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது.