
அரிய வகை முகச்சிதைவு நோய்க்காக அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்ட சிறுமி தானியா நன்கு தேறி வருவதாக அறுவைச் சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனைத் தெரிவித்துள்ளது.
ஸ்டீபன் ராஜ்- சௌபாக்யா தம்பதியின் நான்காம் வகுப்பு படிக்கும் தான்யா, அரிய முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் எதிரொலியாக, நேற்று (23/08/2022) சென்னை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி தானியா, செயற்கை சுவாச கருவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். அவர் நன்கு பேசுகிறார்; அவரின் உடல்நிலை தேறி வருகிறது. மருத்துவமனையில் சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் தானியா, அவரது அன்னையின் அரவணைப்பில் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.