90 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கைகள், அறுவை சிகிக்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை 3 ஆண்டுகள் கடந்தும் உள்கட்சி பூசல், மற்றும் பல்வேறு காரணங்களால் 7 வது முறையாக திறப்பு விழா ஏற்பாடுகள் நடந்தும் திறக்கப்படவில்லை. 7 வது முறையாக இன்று விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 2016 ம் ஆண்டு தாலுகா மருத்துவமனைக்காக ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கை வசதிகள், மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. அதே ஆண்டில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது. ஆனால் இன்று வரை திறக்கப்படவில்லை.
முதல்முறையாக திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்ட போது.. கட்டிட ஒப்பந்தக்காரருக்கும் ஆளுங்கட்சி ந.செ. வுக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் ந.செ அழைக்கப்படவில்லை. அதனால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக கூறி சில முறை ரத்து செய்யப்பட்டது.
இதனால் கறம்பக்குடி தாலுகா பகுதியில் உள்ள கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் ஆலங்குடி, புதுக்கோட்டை என்று அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் நேரத்தில் அரசு நிவாரணத்தில் கொடுத்த பால் பவுடரை குடித்த பலரும் வாந்தி, மயக்கம் எற்பட்டு அவசர சிகிச்சைக்காக வந்த போது மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. அதனால் வந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். இப்படி பல போராட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் தான் கடந்த மாதம் தி.மு.க சார்பில், ’மருத்துவமனையை திற..! ’என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகள் ஜூலை இறுதிக்குள் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என்றதால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று 12 ந் தேதி திங்கள் கிழமை அவசர அவசரமாக மருத்துவமனை திறப்பு விழா என்று கட்டிடத்தில் தோரண விளக்குகள் கட்டப்பட்டு வாழை மரங்கள் நடப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டது. ஆனால் மதியம் எதையும் சொல்லாமல் அவசர அவசரமாக வாழை மரங்கள் பிடிங்கப்பட்டது, மேடை அகற்றப்பட்டது.
ஏன் என்று கேட்ட போது.. இன்று அமைச்சர் வரலயாம். அதனால் இன்றும் திறப்பு விழா ரத்து என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இதைப் பார்த்த மக்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர்.
7 வது முறையும் மக்களுக்கு பயன்படும் மருத்துவமனை திறக்கவில்லை என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் இணைந்து மருத்துவமனை திறக்கும் வரை தொடர் போராட்டங்களை நடத்த அவசரமாக திட்டமிட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் இப்படி ஒரு மருத்துவமனையை மக்களுக்கு கொடுக்காமல் இழுத்தடிப்பது நியாயம் தானா? அமைச்சர் தலையிட்டு திறந்தால் மக்கள் பயனடைவார்கள்.