அக்.26 -அதிகாலை 5 மணி: "குழந்தை இருக்கும் ஆழ் துளைக்குள் சேறு மூடிவிட்டதால், குழந்தையின் நிலை பற்றி தெளிவாக சொல்ல முடியவில்லை' என்கிறார் கலெக்டர் சிவராசு.
ரிக் இயந்திரம், போர்வெல் மிஷின்கள், பொக்லைன்கள், மீட்புக் குழுக்கள் வரவழைப்பு, இவற்றை யெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும் முடிவு செய்து செயல்படுத்தினாரா? பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் முக்கியத்துவம் என்ன?
அரசாங்க உயரதிகாரிகளின் ஆலோசனைகளை அமைச்சர்கள் வட்டாரம் ஏற்றுக் கொண்டதா?
தேசிய பேரிடர் மேலாண் மைக் குழுவினர் அரக்கோணத்தில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துள்ளனர். நடுக்காட்டுப்பட்டிக்கு மிக அருகில் உள்ள, தமிழகத்தின் மையப்பகுதி மாநகரான திருச்சியில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இல்லாமல் போனது ஏன் என சாதாரண மக்களும் பேசத் துவங்கினார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் காளியண்ண கவுண்டர், அக்.27-ஆம் தேதி காலமானார். எடப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில், முதல்வர் கலந்து கொண்டிருந்த போதும், நடுக்காட்டுப்பட்டி நிலவரம் குறித்து விசாரித்து வருகிறார் என 10 நிமிடத்திற்கு ஒரு முறை, அமைச்சர்கள் ஒப்பித்தபடியே இருந்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களின் போராட்டம் தீவிரமானதால், நோயாளிகளின் நிலைமை கவலைக்குரியதாக இருந்தபோதிலும் கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகமே கவலையுடன் உற்று நோக்கிய நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டிருந்தார். உண்ணாவிரதம் இருந்த டாக்டர்கள் உடல் நலிவடைந்து மருத்துவமனையில் அட்மிட்டாக, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தடுமாறிய நிலையில்... சுகாதாரத்துறை அமைச்சர், மீடியா வெளிச்சத்தில் தன்னைக் காத்துக்கொண்டார் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் உதயகுமாரை ஓரங்கட்டிவிட்டு, முழு அதிகாரத்தையும் சுகாதாரம் விஜயபாஸ்கர் தன் கையில் எடுத்தது ஏன் என்ற சர்ச்சையும் சுழன்றடிக்கிறது.