குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என ராகுல் காந்தி முடிவெடுத்து உள்ளதால் தான் சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி,
சிவகங்கை வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார். ஏன் அறிவிக்க தாமதம் என்று சொன்னால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி என்கின்ற ஒரு கொள்கையை தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எடுத்திருக்கிறார். அப்படி பார்க்கிற பொழுது இந்தியா முழுவதும் 40 இடங்களில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்கிறார்கள். எனவே இன்றைக்கு அந்த நாற்பது தலைவர்களையும் அழைத்து பேசி ஒரு முடிவெடுத்து இன்று மாலை அந்த 40 தொகுதிகளிலும் அறிவிக்கப்படும்.
அதிமுக எங்களை எதிர்த்து போட்டியிடுவதால்தான் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக எம்ஜிஆர் காலத்து அதிமுகவோ அல்லது ஜெயலலிதா காலத்து அதிமுகவோ அல்ல மோடியின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் மோடியின் கூட்டணியை விரும்ப வில்லை எனவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தோழர்களே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி என்பது சூறையாடப்பட்ட ஒன்று அவர்களால் வெற்றி பெற முடியாது என்றார்.