தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப., இன்று (27/09/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த சில நாட்களில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வீசிய சம்பவங்கள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்கு பின் 26/09/2022 வரை 11 வழக்குகளில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இன்று கீழ்கண்ட வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர், காட்டூர் காவல் நிலைய எல்லையில் கட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் துடியலுரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு காவல் நிலையம் கருமன்கூடல் பகுதியில் ஒரு வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசி கண்ணாடி சேதம் அடைந்த வழக்கில் குளச்சலைச் சேர்ந்த முசாமில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையம் எல்லையில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி கார்களை சேதப்படுத்திய வழக்கில் அப்துல் ஹக்கீம், சையது இப்ராஹீம்ஷா, அப்துல் ஆஜிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லையில் அரசு பேருந்தின் கண்ணாடியை கல் வீசி சேதப்படுத்திய வழக்கில் முகமது ஷாகுல் ஹமீது, அகமதுல்லா, முகமது மகாதீர் மற்றும் ஹாஜாநவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நான்கு வழக்குகளில் ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.