Skip to main content

வீடு புகுந்து கொள்ளை... காவல்துறையிடம் சிக்கிய பெண்!  

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Home burglary ... Woman caught by police

 

ஆள் இல்லாமல் தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு பகலில் கொள்ளையடிப்பது, இரவு நேரங்களில் யார் இருந்தாலும் துணிந்து உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது, விழித்துக்கொள்ளும் வீட்டுக்காரர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டுவது, கட்டிப் போட்டுவிட்டு கொள்ளையடிப்பது இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆண் கொள்ளையர்களால் நடந்துவருகின்றன. ஆனால், தற்போது பெண் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொள்ளையடிக்கும் சம்பவமும் நடக்கத் துவங்கியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எரவார் காட்டுக்கொட்டாய் பகுதியில் நடந்துள்ளது.

 

அந்தப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பழனிமுத்து, அவரது மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி விவசாய வேலையை செய்துகொண்டு வாழ்ந்துவருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் அவர்கள் வீட்டருகே வந்துள்ளார். அந்தப் பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த கன்னியம்மாளிடம் குடிப்பதற்குத் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். கன்னியம்மாள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பம்புசெட் தொட்டியில் தண்ணீர் உள்ளது, அள்ளி குடிக்கப் பாத்திரமும் உள்ளது, அங்கே போய் குடித்துவிட்டுச் செல்லுமாறு கூறிவிட்டு விவசாய வேலையில் மூழ்கிவிட்டார்.

 

கன்னியம்மாள் தன் வயல் வேலைகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் வீட்டுக்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த நகைகளைப் பார்த்துள்ளார். அதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள தாலி செயின், தோடு, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனத்தில் வந்த பெண்தான் குடிக்கத் தண்ணீர் கேட்ட சாக்கில் வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளார். இதனை அறிந்த கன்னியம்மாள் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார், பட்டப்பகலில் கன்னியம்மாள் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற அந்தப் பெண் கொள்ளையரைத் தீவிரமாக தேடிவந்தனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (18.12.2021) காலை கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திலி பகுதியில் சின்னசேலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பரிமளா என்பது தெரியவந்தது. இவர், கன்னியம்மாள் வீட்டில் தான் திருடியதை விசாரணையில் ஒப்புக்கொண்டதோடு, அவரிடமிருந்து கன்னியம்மாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்