சேலம் மாநகரில் சிஎஸ்ஐ கிறிஸ்ட் சர்ச் எதிர்புறம் உள்ள சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர், அவரின் கையைப் பிடித்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அந்த நபர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வாகன தணிக்கையில் சிக்கி நின்று கொண்டிருந்த சாமானியன் ஒருவர், ''கர்ப்பிணி பொண்ணு கீழ விழுந்தா என்ன சார் பண்ண முடியும். கர்ப்பிணி பொண்ண கைய பிடிச்சு இழுக்குறீங்க இது நியாமா? இது மிகப்பெரிய தப்பு. கர்ப்பிணி பொண்ணு வண்டில உக்காந்துட்டு வருது, அவரது ஹஸ்பண்ட் ஓட்டிட்டு வராரு, பாக்காம கைய புடிச்சு இழுத்துட்டு வரீங்க... அந்த கர்ப்பிணி பொண்ணு கீழ விழுந்தா என்ன ஆகுறது. நான் இப்போ பைன் கட்டிட்டேன். அந்த புள்ளைகிட்ட சாரி கேளுங்க...ஒரு பொண்ண பப்ளிக்ல அசிங்கப்படுத்தலாமா? ஈவிடீஸிங் கேஸ் இல்ல இதெல்லாம். கையபுடிச்சு இழுக்கக்கூடாது. மீறி போனால் கூட வண்டி நம்பர் இருக்கு. ஆன்லைன் கேஸ் எதுக்கு இருக்குது. நம்பர வச்சு ஆன்லைன் கேஸ் போடு'' என்று சரமாரியாகப் பேசினார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காமராஜ் என்ற காவலர் துரத்திச் சென்று எட்டி உதைத்ததால் நிலைதடுமாறி அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா மீது எதிரே வந்த வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.