Skip to main content

சங்ககாலம் முதல் வரலாற்றுச் சிறப்புடன் இருந்த திருவாடானை!

Published on 01/10/2024 | Edited on 01/10/2024
Historical Thiruvadanai since Sangam period

சங்க காலம் முதல் திருவாடானைப் பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்ததாக தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் தலைமை தாங்கினார். முனைவர் க.அழகுராஜா முன்னிலை வகித்தார். 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாரம்பரியத்தை அறியத் தரும் தொல்லியல், ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஆகிய தலைப்புகளில் பேசியபோது கூறியதாவது, “அதிகளவு   நெல் விளைச்சல், விவசாயத்துக்காக பாண்டியர் சேதுபதிகள் உருவாக்கிய கண்மாய்கள், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, இயற்கைத் துறைமுகங்கள், அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய பல காரணங்களால் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானைப் பகுதியில் வணிகர், வணிகக்குழு, அறுநூற்றுவர் என்ற வணிகக்குழு பாதுகாவல் வீரர்கள் இருந்ததைக் கல்வெட்டுகள் சுட்டுகின்றன.

இயற்கை சார்ந்த ஊர்ப் பெயர்கள், துறைமுகப் பட்டினங்கள் எனச் சங்ககாலம் முதல் இப்பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்துள்ளது. உலக மொழிகளில் உள்ள தமிழின் தாக்கத்தை அறிந்து கொள்ள தமிழ்த்துறை மாணவ மாணவியர் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்ச் சொற்களை ஆங்கில சொற்களுடன் இணைத்து ஆய்வு செய்யவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். ந.மணிமேகலை நன்றியுரை கூறினார். 

பின்னர் நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் ராமநாதபுரத்தில் கிடைத்த பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், பானைக் குறியீடுகள், கல்வெட்டுகளின் மைப்படிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

சார்ந்த செய்திகள்