தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் திண்டுக்கல் மாநகராட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 41வது வார்டு விமலா ஆரோக்கியமேரி, 44 வது வார்டு மார்த்தாண்டன், 38வது வார்டு வசந்தி, 46வது வார்டு குலோத்துங்கன் ஆகியோர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 41ஆக உயர்ந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையான கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.
அதன்பின், அமைச்சர் ஐ. பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “திண்டுக்கல் வரலாற்றிலேயே திமுக பெற்றுள்ள மகத்தான வெற்றி இது. தமிழக அரசின் மீதும் தமிழக முதல்வர் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் எப்பொழுதும் செயல்படுவோம். மக்களுக்கு என்னென்ன தேவைகள் என அறிந்து அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும். நாங்களே எதிர்பார்க்காத வகையில் அதிக அளவில் வாக்களித்து மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற மக்களின் மனநிலையை இது காட்டுகிறது. அதுபோல் கட்சியில் உழைத்தவர்களை மதித்து திமுக அவர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கும். திண்டுக்கல் மாநகராட்சியில் பதிவான வாக்குகளில் 80 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாக பொது மக்கள் வாக்களித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்குக் கிடைத்த வாக்கு தான் திமுகவிற்குக் கிடைத்த வெற்றி. திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்? என்பதை தலைமை தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.