நாளுக்கு நாள் பெருகி வரும் இரு, நான்கு சக்கர வாகனங்களால் சென்னை நகரமே திணறிப் போகிறது. இதில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாத சிலரால், ஒட்டுமொத்த பொதுமக்களும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இத்தனை அசவுகரியங்களையும் சரிசெய்வதற்கு போதுமான காவலர்களும் இல்லை. அதனால், இதுபோன்ற பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும்பாடாக இருந்தது. இனி அது குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை.
ஆம், அதற்காக மூன்றாம் கண் என செல்லமாக அழைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம் அவர்கள். இதுவரை சென்னையின் முக்கியமான சாலைகளில் இலக்கான 15 ஆயிரத்து 345 சி.சி.டி.வி. கேமராக்களில், பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இவற்றின் மூலம் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார்.
|
எப்படி என்கிறீர்களா? ஒரு பைக்கில் அதிக இரைச்சல் தரும் சைலன்சரை மாட்டிக் கொண்டு, அதிவேகமாக அதுவும் மூன்று பேராக ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதாக எடுத்துக் கொள்வோம். தூரத்தில் ட்ராபிக் போலீஸ் இருப்பதைப் பார்த்துவிட்டால், கலெக்சனுக்கு அஞ்சி ரூட்டை மாற்றிக்கொண்டு போவார்கள்தானே? ஒருவேளை அங்கு போலீஸ் இல்லையென்றால்...? எனக்கென்னவென அதே ரூட்டில் பயணம் செய்வார்கள். இனி, போலீஸ் இல்லையென்றாலும், சிசிடிவி காட்சிகள் மூலம் அவற்றைக் கண்காணித்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
அதாவது, குற்றம் செய்தவரின் வாகன பதிவு எண்ணின் மூலம், அவரைக் கண்டுபிடித்து அவரது வீட்டு முகவரிக்கே அபராதத்திற்கான செல்லான் அனுப்பப்படும். அந்தச் செல்லான் மூலம் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்தலாம். இதன்படி, சென்னையில் புத்தாண்டு இரவில் இடைஞ்சல் தரும்படியான பயணத்திற்காக 186, அதிவேக பயணத்திற்கு 57, இரைச்சல் சைலன்சர் பொருத்தியதற்காக 16 மற்றும் மூன்று பேராக பயணித்ததற்காக 141 பேர் என மொத்தம் 401 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸே கண்டுகொள்ளாமல் விட்டாலும், இனி அந்த மூன்றாவது கண் விடாது போலிருக்கே.. அதனால, ட்ராபிக் ரூல்ஸை ஒழுங்கா ஃபாலோ பண்ணுவோமே பாஸ்?!