ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
68 தொகுதிகள் கொண்ட ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டு வரும் வேளையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் திருச்சி நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவைச் சார்ந்த மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.