பெண்கள், சுய விருப்பத்தின் பேரில்தான் தண்டனைக் கைதிகளைத் திருமணம் செய்கிறார்களா என்பதை விசாரிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லையென, தேசிய மகளிர் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு, விடுப்பு அல்லது பரோல் கோரி மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளை, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோலில் வந்து செல்லும் ஆயுள் தண்டனைக் கைதிகளைத் திருமணம் முடிக்கும் பெண்கள் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.
ஆயுள் தண்டனைக் கைதிகளை மணமுடிக்கும் விவகாரத்தில், மணமகளின் ஒப்புதல் பெறப்படுகிறதா அல்லது பல்வேறு மத மற்றும் சாதி ரீதியிலான நடைமுறை காரணமாக கட்டாயப்படுத்தப் படுகிறார்களா என ஆராயும் நடைமுறையை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்து, தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலாளர் பிரீத்தி குமார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தேசிய மகளிர் ஆணைய சட்டப்படி, ஆணையம் என்பது ஆலோசனைக்குழு மட்டுமே, அரசுக்கு உத்தரவிடும் அமைப்பு அல்ல. மேலும், திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். தண்டனைக்கு உள்ளானவரை பெண்கள் திருமணம் செய்ய எந்தச் சட்டமும் தடையாக இல்லை.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. தண்டனைக் கைதியை திருமணம் முடிக்கும் பெண்ணிடம் ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது மதம் மற்றும் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக நடத்தப்படுகிறதா என்பதை விசாரிப்பதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.