
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது கோடங்குடி கிராமம். இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்புகளில் இருந்து உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மின்சாதனப் பொருட்கள் டிவி, லேப்டாப், மின்விசிறி, மொபைல் போன்கள், ஏர்கூலர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளன. இதனால் கோபமுற்ற அந்த கிராம மக்கள் சேதமடைந்த பொருட்களை எல்லாம் ஊருக்கு பொது இடத்தில் கொண்டுவந்து கும்பலாக வைத்து கோஷமிட்டனர்.
பழுதடைந்த மின் சாதன மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்த திட்டக்குடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் நேரில் சென்று பார்வையிட்டதோடு உயர் அழுத்த மின்சாரம் எப்படி ஏற்பட்டது என்று ஆய்வு செய்து அந்தப் பகுதியில் உடனடியாக சரிசெய்து சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த திடீர் உயர் மின் அழுத்தம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, “நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. அதனால் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் திடீரென்று உயர் அழுத்த மின்சாரம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது வேதனையளிக்கிறது என்கிறார்கள் ஊர் மக்கள். மேலும் இதனை புதிதாக வாங்குவதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கே சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் பொழுது போக்கு மற்றும் அத்தியாவசிய மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது, இதை எப்படி எங்களால் சரி செய்ய முடியும்” என்று கவலையோடு கூறுகிறார்கள் கோடங்குடி கிராம மக்கள். எனவே அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.