மதனுக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்பில் இடம் பெற்றுத் தருவதாக கூறி மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து ரூ.84 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில், பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த மதனை, மத்திய அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதில், சட்டவிரோதமாக ரூ.84 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதன், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நிபந்தனை அடிப்படையில் மதனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ரூ.50 ஆயிரம், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதங்களை வழங்கி, மதன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். என்று நீதிபதி கூறியுள்ளார்.