சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ரூ.50 கோடி செலவில் நடைபாதைகள் அமைத்துள்ள நிலையில், அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர் வந்தனா ஷக்காரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வந்தனா ஷக்காரியா, தனது மனுவில் ‘மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன; வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன; மின்சாரப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால், பாதசாரிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, நடைபாதைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்.’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சியின் கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைத்திருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.