
தர்மபுரி மாவட்டம் ஏமனூரில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் ஆண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு அதனுடைய தந்தம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கொங்கராம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் செந்தில் என்ற இளைஞரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த 18ஆம் தேதி (18.03.2025) கை விலங்குடன் தப்பிய செந்தில் காணாமல் போனார். செந்திலின் மனைவி மற்றும் உறவினர்கள் அவர் தப்பி ஓடிய அடுத்த நாளான 19ஆம் தேதியே காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதில் உயிருடன் செந்திலை மீட்டுத் தர வேண்டும். அவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி (04.04.2025) ஏமனூர் காப்புக் காட்டு வனப்பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அது கை விலங்குடன் தப்பிய செந்திலின் உடல் எனத் தெரியவந்துள்ளது. அருகிலேயே நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடைத்தது.
மேலும் அவரது உடையை வைத்து உயிரிழந்து கிடந்தது செந்தில் என உறுதி செய்யப்பட்டது. யானை வேட்டையில் ஈடுபட்டதால் வனத்துறையினரே திட்டமிட்டு செந்திலைக் கொன்றதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தனது கணவரை வனத்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்ததாக அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (08.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ செந்திலின் உடலை 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தலைமையில் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.