சென்னை பெரும்பாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ஒரு வழக்கறிஞர் ஆணையத்தினை நியமித்து இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் ஆணையரும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதோடு இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு ஆணையமும் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (09.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் குழு ஆணையர் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை அதை நீதிபதிகள் படித்தது பார்த்தனர். அதில், “பெரும்பாக்கம் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. பெரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் காவல்துறை சார்பிலும் அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “போதைப்பொருள் கட்டுப்படுத்துவதற்கான போதைப்பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசார் பெரும்பாக்கத்தில் இல்லை. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு பிரிவில் 180 போலீசார் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கஞ்சா போன்ற போதைப் பொருள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கிறது. மாணவர்கள் மத்தியில் புழங்கும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த அதிகளவில் போலீசார்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலாளருக்கும், மாநிலத் தலைமை காவல் இயக்குநருக்கும் (DGP)உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.