Skip to main content

'விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்குப் பின் வீட்டுமுன் வைக்கலாம்' என்ற பகுதியை மட்டும் நீக்கிய உயர் நீதிமன்றம்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

high court

 

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலம் தொடர்பாக தமிழ்நாடு சிவசேனா தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணபதி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பொது இடங்களில் சிலை வைக்கக்கூடாது என்ற அரசு உத்தரவை உறுதிப்படுத்திய நீதிபதிகள், தனி நபர்கள் மட்டும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்று அனுமதி அளித்தும், சென்னை மெரினா கடற்கரையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளைக் கரைக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தும் உத்தரவிட்டனர்.

 

இந்நிலையில், கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை அறநிலையத் துறையே சேகரித்து கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டை ஏற்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் வழிபட்ட பிறகு கோவில்களில் வந்து வைக்கப்படும் விநாயகர் சிலைகளை, இந்து அறநிலையத் துறையினர் சேகரித்து, நீர் நிலைகளில் கரைக்க அனுமதித்து உத்தரவிட்டனர். 

 

அதேசமயம், நேற்று பிறப்பித்த உத்தரவில், தனிநபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு முடித்ததும், சிலைகளை அவர்கள் வீட்டின் முன் வைக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உத்தரவின் இந்தப் பகுதியில் "வழிபாட்டிற்கு பின்னர் வீட்டின் முன்வைக்கலாம்" என்ற பகுதியை மட்டும் நீக்குவதாக, நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம், விநாயகர் சிலைகளைக் கோயில்களுக்குச் கொண்டு சென்று வைக்க வேண்டும் அல்லது தனி நபர்கள், நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்