கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடர வேண்டும் எனவும் மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்த போது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன எனவும், தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்த நீதிபதிகள், மூன்றாவது அலை தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறுவதற்கு எந்த அறிவியல்பூர்வ அடிப்படையும் இல்லை என்ற போதும், எதிர்காலத்தில் பரவல் அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்வதற்காக, இரண்டாவது அலையைச் சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி மருந்து வினியோகத்தைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.