Skip to main content

சிலைக்கடத்தல் வழக்கு: அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம்!     

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

High Court dissatisfied on temple statue cases !

 

சிலைக்கடத்தல் வழக்குகளில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், மற்ற வழக்குகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடும் முழுவதும் சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 41 வழக்குகள் தொடர்பான ஆவணங்களில், 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த அறிக்கையை ஆய்வுசெய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் இராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர், ஆவணங்கள் மாயமானதாக கூறி வழக்குகளைக் கைவிட்ட அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் விசாரணை தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

 

16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படாதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், பல வழக்குகளில் சிலைகள் மீட்கப்படவில்லை என்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தீவிரம் காட்டவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மாயமான 16 வழக்குகளின் கோப்புகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்