புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கூட்டாட்சி தத்துவத்தின்படி அரசும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியாது எனவும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகமும், புதுச்சேரி நிர்வாகியும் துணைநிலை ஆளுநருமான கிரண்பேடியும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுக்கு ஏற்பதான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியும் என்றும், அவருக்கென தனியாக பிரத்யேக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும் லட்சுமி நாராயணன் தரப்பில் வாதிடப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளை கண்காணிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர். புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் துணைநிலை ஆளுநருக்கு கருத்து வேறுபாடு இருக்கும்பட்சத்தில், அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது, அதில் விரைந்து முடிவுகாண மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை தாமதம் ஏற்படும்பட்சத்தில், அதன் பாதிப்பு மக்களைத்தான் சென்றடையும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், புதுச்சேரி அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென இருதரப்புக்கும் தீர்ப்பில் அறிவுத்தல் வழங்கியுள்ளனர்.