சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன், "மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்திருந்தோம். ஆனால் சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் மிக குறுகிய காலத்தில் அதிதீவிரமாக மழை பெய்தது; சென்னை நுங்கம்பாக்கத்தில் 45 நிமிடங்களிலேயே 6 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (07/11/2021) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சில நேரத்தில் அதி கனமழையும் பெய்யலாம். நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும். காற்று வீசும் என்பதால் வங்கக் கடலுக்கு இன்று, நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சென்னையில் கனமழை பெய்தாலும் விமானங்கள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.