தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.
இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்.16 ஆம் தேதி சென்னையில் அதிக கன மழை சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நாளை மறுதினம் சென்னைக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (Red Alert )விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழக அரசு செய்து வரும் நிலையில் அந்த பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது. பணிகளின் நிலை என்ன என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் கேட்டறிந்துள்ளார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல்; மரக்கிளைகள் முறிவதற்கான வாய்ப்புள்ள இடங்கள்; மழை நீர் வடிகால் பணிகள்; ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிய நிலையில் வட கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.