தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கனமழை எச்சரிக்கை அறிவிப்பில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை பெருநகர் மற்றும் புறநகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழக பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மூன்று மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 10 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி இருக்கிறது.