தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சென்னை அசோக் நகர், வடபழனி, தியாகராயநகர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அம்பத்தூர், கொடுங்கையூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அயனாவரம், எண்ணூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், நீலகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக மூன்று சென்டிமீட்டர் மழைப் பதிவாகி இருக்கிறது. சத்யபாமா பல்கலைக் கழகத்திலும், வட சென்னையிலும் 2 சென்டிமீட்டர் மழைப் பதிவாகி இருக்கிறது.