தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழைப் பொழிவு இருந்துவருகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைப் பொழிவால், மானாவாரி நிலங்களில் விதை விதைத்துவருகிறார்கள்.
இந்த மழையினால் ஏரி, குளங்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஓடைகள் வழியாக தண்ணீர் நிரம்பிவருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இரவு (27.08.2021) பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய பெரும் மழைப் பொழிவு இருந்தது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி - வேப்பூர் நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட மரங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் சாலையை சீர் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.