சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 6 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. நகரின் முக்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வரை இடி மின்னலுடன் சென்னையின் பல இடங்களில் மழைபொழிந்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது.
தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், அடுத்த ஆறு மணி நேரத்திற்கு சென்னையில் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதிகம்பேர் மெட்ரோ ரயில் சேவையை நாடியுள்ளனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.