வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் தமிழகத்தில் பல இடங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் 10.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரையில் 8.3 சென்டிமீட்டர் மழையும், நெய்யூரில் 8.1 சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 7.1 சென்டிமீட்டர் மழையும், திருவாரூரில் 6.8 சென்டிமீட்டர் மழையும் நாகை மற்றும் திருச்சியில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 25ஆம் தேதி (நாளை) தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.